Visitors Count

Monday, February 14, 2011

இப்படியும் சில எம்எல்ஏக்கள்

மதுரையிலுள்ள ஒரு பிரபல கல்லூரி. தனது மகனை அங்கு சேர்ப்பதற்காக பணம் கட்ட வந்திருக்கிறார்கள். மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ நன்மாறன். ஆனால், மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசி நாளான அன்று, பணம் கட்டும் நேரமும் கடந்துவிட்டது. கடன உடன வாங்கி பணம் ரெடி பண்ணிட்டு வர்றதுக்கு நேரமாயிருக்சுங்க என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் நன்மாறன். ஸாரி சார், டைம் ஓவர் என்பதே கல்லூரி நிர்வாகத்தின் பதில்.
நன்மாறன்
அடுத்த ஆண்டு முன்னர் சொன்ன அதே பிரபல கல்லூரியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் நன்மாறன். மேடையில் பேசிய அக்கல்லூரியின் முதல்வர் நன்மாறனின் எளிமையைப் பாராட்டியதோடு நமது கல்லூரியில் நம் எம்எல்ஏவின் மகனும் படிக்கிறார் என்பது நமக்குப் பெருமை என்று பேச... உடனே நன்மாறன், அவரது கையைப் பிடித்து சுரண்டி யிருக்கிறார். என்ன?வென குனிந்து கேட்ட முதல்வரிடம் என் பையன் இங்க படிக்கலை சார், அன்னிக்கு டைம் முடிஞ்சுருச்சுன்னு சொல்லிட்டாங்க, சரி, படிக்கிறதுக்கு சிபாரிசு எதுக்குன்னுட்டு வேற காலேஜ்ல சேத்துட்டேங்க என்று மெல்லிசான குரலில் சொல்லி முடிக்க... ஆடிப்போனார் கல்லூரி முதல்வர்.

பார்ப்பதற்கு மிக மிக எளிமையாக இருப்பவர் திருவட்டாறு எம்எல்ஏ லீமாறோஸ். ஒருமுறை தனது தொகுதியிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு போயிருக்கிறார். அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் நான் இந்தத் தொகுதி எம்எல்ஏ. ஆர்டிஓவைப் பார்க்கணும் என்றிருக்கிறார். உதவியாளர் நம்பாமல் விசிட்டிங் கார்டு கேட்டிருக்கிறார். இல்லையே என்ற லீமாறோஸ் ஒரு துண்டுச்சீட்டில் எழுதித் தந்தார். அதைப்பார்த்த ஆர்.டி.ஓ. லீமாறோஸை வரச் சொல்லியிருக்கிறார்.
லீமாறோஸ்.
உள்ளே வந்தவரைப் பார்த்ததுமே ஆர்.டி.ஓ., உதவியாளரைக் கூப்பிட்டு எம்எல்ஏவை முதலில் அனுப்புங்க என்று சொல்ல, நான்தான் எம்எல்ஏ என்று லீமா சொல்லியும் அவர் நம்பவில்லை. தனது அடையாள அட்டையை லீமாறோஸ் எடுத்துக்காட்டிய பிறகுதான் ஆர்.டி.ஓ. ஸாரி மேடம், பொதுவா எம்எல் ஏன்னா ஆடம்பரமா, நிறைய ஆட்களோட வரு வாங்க. நீங்க சாதாரணமா, தனியா வந்ததால நம்ப முடியலை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ராமசாமி, திண்டுக்கல் பாலபாரதி, நாகப்பட்டினம் வி.மாரிமுத்து, விளவங்கோடு ஜாண்ஜோசப், அரூர் டில்லி பாபு, குடியாத்தம் லதா, பெரம்பூர் எ.கே. மகேந்திரன் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசு அளித்துள்ள இலவச பஸ்பாஸை பயன்படுத்தித்தான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்கின்றனர். வட்டச் செயலாளர்களே ஸ்கார்பியோ, டொயோட்டானு பறக்கற காலத்துல இவங்க இப்படியா? என்று சகபயணிகளோடு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் ஆச்சரியப் பார்வை பார்க்கின்றனர்.

நன்றி : புதிய தலைமுறை (பிப்ரவரி 10)

0 comments:

Post a Comment

இந்தியா – Google செய்திகள்